ஆதாரம்
AdSense மூலம் தரமான விதத்தில் வருவாய் ஈட்டும் மூன்று வகையான வலைதளங்கள்
உங்கள் வலைதளம் மூலம் லாபம் பெறுவது எப்படி எனக் கற்றுக்கொள்ள முயல்கிறீர்களா? இந்த மூன்று வகையான வலைதளங்களும் AdSense மூலம் தொடர்ச்சியாக லாபம் ஈட்டி வருகின்றன.
Google AdSenseஸைப் பயன்படுத்தி உங்கள் இணையதளத்தின் மூலம் லாபம் பெறுவது குறித்து அறிய விரும்புகிறீர்களா? அப்படியானால் எந்த வகையான வலைதளங்கள் மூலம் Google AdSenseஸைப் பயன்படுத்தி அதிகமாகச் சம்பாதிக்கலாம் என அறிந்துகொள்வதே Google AdSense வழங்கும் உதவிக்குறிப்புகளில் அடிப்படையானதாகும். குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய அதிகமான உள்ளடக்கத்தையும் அதற்கு அதிகப்படியான டிராஃபிக்கையும் கொண்டுள்ள வலைதளமே லாபம் பெறப் பொருத்தமானது என்பதே இதற்கான எளிய பதில். குறிப்பாகச் சொன்னால் AdSense மூலம் வருவாயைப் பெற பின்வரும் மூன்று வகையான வலைதளங்களை நீங்கள் உருவாக்க முயல வேண்டும்.
எந்த வகையான வலைதளத்தை உருவாக்கினாலும் அது Google AdSense கொள்கைகளுடன் இணங்குவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். குறிப்பாக Google AdSenseஸில் அனுமதிக்கப்படாத உள்ளடக்க வகைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும்.
1. வலைப்பதிவு
எப்போதாவது அரிதாக மாறும் உள்ளடக்கத்தைக் கொண்ட, ஓரிரு பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள வலைதளங்களைப் போல இல்லாமல் நீங்களும் உங்களுடன் தொடர்புடைய மற்றவர்களும் (AdSense கொள்கைகளின்படி அவர்களது உள்ளடக்கத்தைக் கையாள நீங்கள் பொறுப்பேற்றிருந்தால்) தொடர்ந்து புதிய உள்ளடக்கத்தை வெளியிட்டு வரக்கூடிய வலைதளங்களே வலைப்பதிவுகள் ஆகும். சில வலைப்பதிவுகளில் புதிய உள்ளடக்கம் வெளியிடப்படுவது ஒரு மணிநேரத்திற்கு ஒன்று என்பதிலிருந்து மாதம் ஒரு பதிவு என்பதுவரை இருக்கலாம் . பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை, உரிமையாளர்களும் எடிட்டர்களும் உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்து அதை வெளியிட எடுத்துக்கொள்ளும் நேரம் போன்ற பல காரணிகளைப் பொருத்து இந்தக் கால இடைவெளி அமைகிறது.
பிரபல வலைப்பதிவுகளில் ஒன்றான Daily Dot தங்கள் பயனர்கள் மூலம் தொடர்ந்து லாபம் பெற Google AdSenseஸைப் பயன்படுத்துகிறது. Google Display Plannerரில் குறிப்பிட்டுள்ளவாறு, மாதத்திற்கு ஏறத்தாழ ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி இம்ப்ரெஷன்களை இந்த வலைப்பதிவு பெறுகிறது. அந்த வலைப்பதிவில் தலைப்புகள், வலைப்பதிவு இடுகையின் அடிக்குறிப்புகள், சிறந்த இடுகைகளின் பட்டியல்களுக்கு இடையே உள்ள இடைவெளிகள் என வலைதளம் முழுவதும் பல்வேறு இடங்களில் Google AdSense பேனர் விளம்பரங்கள் காட்டப்படுகின்றன.
2. மன்றம்
சொந்த உள்ளடக்கத்தை உருவாக்குவதோ உள்ளடக்கப் பங்களிப்பாளர்களை நிர்வகிப்பதோ சரியாக அமையவில்லை எனில் AdSense வருவாயைப் பெற அடுத்த நிலையிலுள்ள சிறந்த வகை வலைதளம் மன்றம் ஆகும். மன்றங்கள் என்பவை சில குறிப்பிட்ட தலைப்புகள் குறித்துக் கலந்துரையாட பொதுமக்களால் பயன்படுத்தப்படும் வலைதளங்கள் ஆகும். உதாரணமாக, உலகெங்கிலும் உள்ள பூனை விரும்பிகளுக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள catforum.com என்ற மன்றம் Google AdSense மூலம் லாபம் பெறுகிறது.
பத்து லட்சத்திற்கும் அதிகமான இடுகைகளையும் 49,000க்கும் அதிகமான உறுப்பினர்களையும் கொண்ட இந்த மன்றம் அதிகச் செயல்பாடுகளுடன் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது. இந்த வலைதளத்திற்கு வரும் கட்டணம் செலுத்தாத உறுப்பினர்கள் உள்நுழையும் போதும் மன்றத்தின் கலந்துரையாடல்களைப் பார்க்கும்போதும் Google AdSense விளம்பரங்களைப் பார்ப்பார்கள்.
மன்றங்களைப் பொறுத்தவரை முதலில் உள்ளடக்கத்தை நீங்களே உருவாக்க வேண்டும். எனினும் வலைப்பதிவு உள்ளடக்கம் போல நீண்டதாக இல்லாமல் குறிப்பிட்ட தலைப்பிலான கலந்துரையாடலாக அது இருந்தால் போதும். பிறகு உங்களுடன் சேர்ந்து அதில் பங்கேற்கும் பயனர்களைக் கண்டறிய வேண்டும். சிறிது காலத்திற்குப் பின்னர் அந்தக் குறிப்பிட்ட தலைப்பு குறித்துக் கலந்துரையாட உங்கள் மன்றத்திற்கு அதிகமான பயனர்கள் வருவதோடு அந்தத் தலைப்புடன் தொடர்புடைய விளம்பரங்களை அவர்கள் கிளிக் செய்யவும் தொடங்குவார்கள். பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் குறித்த சிறப்பு AdSense கொள்கைகளைப் படித்துப் பாருங்கள்.
3. இலவச ஆன்லைன் கருவிக்கான வலைதளம்
இலவச ஆன்லைன் கருவிகளை வழங்கும் வலைதளத்தை உருவாக்குவது டெவெலப்பர்களுக்கும் டெவெலப்பர்களைப் பணியமர்த்த முடிந்தவர்களுக்கும் AdSense மூலம் வருவாயைப் பெறுவதற்கான மற்றொரு வழியாகும். இலவச ஆன்லைன் கருவிகளைப் பயன்படுத்தும் சரியான இலக்குப் பார்வையாளர்களைக் கண்டறிந்து தங்கள் சமூக வலைதள நண்பர்களுக்கும் அவர்கள் அக்கருவிகளைப் பரிந்துரைக்குமாறு செய்ய முடிந்தால் அக்கருவிகள் மிகவும் பிரபலமாகிவிடலாம்.
உதாரணமாக, GIFmaker.me என்ற வலைதளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். GIFகளை உருவாக்கக் கூடிய ஓர் இலவச ஆன்லைன் கருவியை இந்த வலைதளம் வழங்குகிறது. சமூக வலைதள நெட்வொர்க்குகளில் இது மிகவும் பிரபலமாகி வருகின்றது. வலைதளப் பயனர்கள் இலவச GIFகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் போது பல்வேறு Google AdSense விளம்பரங்கள் வலைதளத்தின் மேற்பகுதியிலும் பக்கப்பட்டிகளிலும் காட்டப்படுகின்றன.
இலவச ஆன்லைன் கருவிகளை வழங்கும் உங்கள் வலைதளம் இலக்குத் தேடல் குறிப்பின் மூலம் முதல் ரேங்க்கைப் பெற முடிந்தால் அதற்குத் தக்க தரத்தில் மற்றொரு இலவச ஆன்லைன் கருவியை உருவாக்க உங்கள் AdSense வருவாயைப் பயன்படுத்தலாம்.
Google AdSense மூலம் லாபம் பெற நீங்கள் எந்த வகையான வலைதளத்தைப் பயன்படுத்தினாலும் அதன் மூலம் தவறாமல் லாபம் பெற பின்வரும் மூன்று முக்கியக் குறிப்புகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். முதலாவதாக, உங்களின் வலைப்பதிவிற்கோ மன்றத்திற்கோ இலவச ஆன்லைன் கருவிக்கோ நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்பு பொதுமக்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அவர்கள் தேடக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யுங்கள்.
Google தேடல் பயனர்களிடையே உங்கள் வலைதளத்திற்கான தலைப்பு பிரபலமாக உள்ளதா என்பதைப் பார்க்க Google AdWords Keyword Planner கருவியை நீங்கள் பயன்படுத்தலாம். உதாரணமாக, gif maker மாதத்திற்குச் சராசரியாக 110,000 தேடல்களைப் பெறுகிறது. SimilarWeb அமைப்பு குறிப்பிட்டுள்ளவாறு, அந்த வலைதளம் மாதம் ஒன்றுக்கு பத்து லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைப் பெற்றிருக்க இதுவே காரணம். Google வலைநிர்வாகி வழிகாட்டுதல்களில் ’உங்கள் பக்கங்களைப் புரிந்துகொள்ள Googleளுக்கு உதவுங்கள்’ என்ற தலைப்பிலான பிரிவில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின்படி கண்டறியப்படும் தேடல் குறிப்புகள், உங்கள் வலைதளத்தின் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
இரண்டாவதாக, உங்கள் இணையதளப் பயனர்களுக்கு அதிகமாகப் பயன்படக்கூடிய ஒன்றை உருவாக்க வேண்டும். வருவாயை உருவாக்க உங்கள் வலைதளத்தின் விளம்பரங்களைக் கிளிக் செய்வதற்குப் பயனர்களை ஊக்குவிப்பதே உங்களின் இறுதி லட்சியம் ஆகும். தகவல்களை அதிகமாகக் கொண்ட வலைப்பதிவு இடுகைகளை நீங்கள் உருவாக்கவில்லை என்றாலோ, நடுத்தர எண்ணிக்கையிலான பயனர்களையாவது உங்கள் வலைதளத்தின் கலந்துரையாடல்களில் ஈடுபடச் செய்யவில்லை என்றாலோ, மதிப்பு வாய்ந்த கருவியொன்றை வழங்கவில்லை என்றாலோ, உங்கள் இணையதளத்திற்கு வருவதை மக்கள் நிறுத்திவிடுவார்கள. உங்கள் விளம்பரங்களைக் கிளிக் செய்வதற்கான பயனர்களையும் இழந்துவிடுவீர்கள்.
மூன்றாவதாக, உங்கள் உள்ளடக்கத்தைப் படிக்கவும், கலந்துரையாடல்களில் ஈடுபடவும், கருவியைப் பயன்படுத்தவும், தேவையான பயனர்களைப் பெற உங்கள் வலைப்பதிவையோ மன்றத்தையோ கருவியையோ விளம்பரப்படுத்துங்கள். உங்கள் வலைதளத்தை விளம்பரப்படுத்துவதன் மூலம் சமூக வலைதளப் பகிர்வுகளையும் மதிப்புமிக்க பின்னிணைப்புகளையும் பெற முடியும். தேடல் இன்ஜின்களில் உங்கள் வலைதளத்திற்கு உயர்ந்த ரேங்க்கிங்கைப் பெற்றுத்தர பின்னிணைப்புகள் உதவும். சரியான வழிகளில் தேடல் இன்ஜின்களில் இணையதள ரேங்க்கிங்கை உயர்த்துவது குறித்து மேலும் அறிய Google வலைநிர்வாகி வழிகாட்டுதல்களில் ’உங்கள் பக்கங்களைப் புரிந்துகொள்ள Googleளுக்கு உதவுங்கள்’ என்ற தலைப்பிலான பிரிவில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை மீண்டும் படித்துப் பாருங்கள்.