ஆதாரம்
Google AdSense மூலம் லாபம் பெறுவதற்கான சிறந்த நடைமுறைகள்
Google AdSense மூலம் லாபம் பெறுவதற்கான சிறந்த நடைமுறைகள் என்ன? AdSense மூலம் பணம் சம்பாதிக்க உதவும் எங்கள் பரிந்துரைகளைப் பாருங்கள்
Google AdSense மூலம் பணம் சம்பாதிக்க அதற்கான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். உங்கள் Google AdSense வருவாய் தொடர்ந்து அதிகரிப்பதையும் வலைதளம் தொடர்ந்து சிறப்பாக வளர்ந்து வருவதையும் உறுதிப்படுத்த இவை உதவுகின்றன.
1. வெவ்வேறு விளம்பர யூனிட்கள் மூலம் பரிசோதனை செய்யுங்கள்.
குறிப்பிட்ட காரணத்திற்காக Google AdSense வெவ்வேறு விளம்பரத் தோற்றங்களை தனது விளம்பரங்களில் பயன்படுத்துகிறது. வலைதளத்திற்கு வருகை புரியும் வெவ்வேறு விதமான பயனர்கள் வெவ்வேறு வகையான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றைக் கிளிக் செய்வார்கள். சில பயனர்கள் விளம்பரங்களுக்கான இணைப்புகளைக் கிளிக் செய்வார்கள். சிலர் பெரிய பேனர் விளம்பரங்களைக் கிளிக் செய்வார்கள். சிலர் வீடியோ பிளாக்குகளைக் கிளிக் செய்வார்கள்.
பயனர்களின் செயல்பாடு குறிப்பிட்ட விளம்பரத் தோற்றத்தை மட்டும் சார்ந்து அமைவதில்லை, விளம்பரத்தை வழங்கும் விளம்பரதாரரைப் பொருத்தும் அந்த விளம்பரம் பயனருடன் எவ்வாறு ஒத்துப்போகிறது என்பதைப் பொருத்துமே அது அமையும். உதாரணமாக ஒரு பயனர் பெரிய சில்லறை விற்பனையாளரின் வலைதளத்தைப் பார்த்துவிட்டுப் பிறகு உங்கள் வலைதளத்தைப் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். அந்தச் சில்லறை விற்பனையாளரின் வலைதளத்தில் இருந்த குறிப்பிட்ட அளவிலான மீள் மார்க்கெட்டிங் விளம்பரங்களை அவர் பார்த்துவிட்டு, அதே அளவிலான விளம்பர பிளாக் ஒன்றை உங்கள் வலைதளத்திலும் பார்க்கும்போது, அதைக் கிளிக் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே வெவ்வேறு விளம்பர யூனிட்களைப் பயன்படுத்தி பரிசோதனை செய்யுங்கள். இதன் மூலம் லீடர்போர்டு, ஸ்கைஸ்க்ராப்பர், இணைப்பு விளம்பர யூனிட்கள் ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதை நீங்கள் கண்டறியக்கூடும்.
2. உங்கள் வலைதளத்தின் வகைக்கேற்ற சிறந்த விளம்பரக் காட்சிப்படுத்துமிடங்களைக் கண்டறியுங்கள்.
Google AdSense விளம்பரங்களை உங்கள் வலைதளத்தில் எந்தெந்த இடங்களில் வைப்பது என உறுதியாகத் தெரியாவிட்டால், சிறந்த விளம்பரக் காட்சிப்படுத்துமிடங்களுக்கான ஆதாரங்களாக விளங்கும் பின்வரும் வலைதளங்களைப் பார்த்துவிட்டு, பிறகு உங்கள் வலைதளத்தில் அவற்றை வைக்கவும்: செய்தி வலைதளங்கள், வகைப்படுத்தப்பட்ட வலைதளங்கள், கேமிங் வலைதளங்கள், மன்றங்கள், வலைப்பதிவுகள், விளையாட்டு வலைதளங்கள், பயண வலைதளங்கள்.
உங்கள் பார்வையாளர்களுக்கு ஏற்ற விதத்தில் விளம்பரங்களை எந்தெந்த இடங்களில் வைத்தால் நன்றாக இருக்கும் என்பதை அறிய மற்றொரு வழி, உங்களுடையதைப் போன்றுள்ள மிகவும் பிரபலமான வலைதளங்களைக் கண்டறிந்து அவற்றில் விளம்பரங்கள் எவ்வாறு வைக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்பதாகும். அவர்கள் Google AdSenseஸைப் பயன்படுத்தாவிட்டாலும்கூட தங்கள் வலைதளங்களில் விளம்பரங்களை எந்தெந்த இடங்களில் வைத்துள்ளார்கள் என்பதை உன்னிப்பாகக் கவனியுங்கள். இதன் மூலம் அதிக இம்ப்ரெஷன்களைப் பெறுவதற்கும் தங்கள் விளம்பரதாரர்களுக்கு அதிகப்படியான கிளிக்குகளைப் பெற்றுத் தருவதற்கும் ஏற்ற சரியான விளம்பரக் காட்சிப்படுத்துமிடங்கள் குறித்த அவர்களின் அனுபவ அறிவை நீங்களும் கற்றுக்கொள்ளலாம்.
இதைக் குறித்த ஆய்வுகளை முடித்துவிட்டு நீங்கள் பரிசோதனையைத் தொடங்கலாம். Googleளின் பரிந்துரைகளை ஒரு வாரத்திற்கு முயன்று பாருங்கள், பிரபல வலைதளங்களில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளதைப் போன்று உங்கள் வலைதளத்திலும் Google AdSenseஸைப் பயன்படுத்தி விளம்பரங்களை வைத்து இன்னொரு வாரம் முயன்று பாருங்கள். அதன் பிறகு எந்த வாரத்தில் அதிகப்படியான வருமானம் வருகிறது என்பதைப் பார்த்து, பார்வையாளர்களுக்கு எந்தத் தளவமைப்பு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்வீர்கள்.
3. உங்கள் விளம்பரங்கள் மொபைல் சாதனங்களுக்குப் பொருந்துபவையாக இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள்.
முதலாவதாக, உங்கள் வலைதள வடிவமைப்பை மொபைல் சாதனங்களுக்குப் பொருந்துபவையாக அமைத்துக்கொள்வது நல்லது. அதுதான் மொபைல் பயனர்களுக்கு ஏற்றவையாக இருப்பதற்கான Google பரிந்துரைத்த வழியாகும். உங்கள் விளம்பரங்கள் மொபைல் பயனர்களுக்கு ஏற்றவையாக இருப்பது அவசியமா? முதலாவதாக, உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் விளம்பரங்கள் எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை அறிந்துகொள்ள அதன் மூலம் உங்கள் வலைதளத்தைப் பார்க்க வேண்டும். தலைப்பில் காட்டப்படும் நிலையான லீடர்போர்டு விளம்பர யூனிட் உங்களிடம் இருந்தால், அதற்கு பதிலாக மொபைலுக்குப் பொருந்தும் லீடர்போர்டு விளம்பர யூனிட்டாக அதை மாற்றுவதற்குப் பரிசீலிக்கவும்.
இதைச் செய்வதற்கு முன்பு உங்கள் வலைதளத்திற்கும் AdSense மூலமான வருவாய்க்கும் மொபைல் சாதனங்கள் மூலம் வரும் டிராஃபிக் அவசியம்தானா என்பதை அறிய விரும்பலாம். Google Analytics மூலம் இதை அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக, Google Analyticsஸையும் AdSense கணக்குகளையும் இணைப்பதன் மூலம் டெஸ்க்டாப் பயனர்களால் வரும் டிராஃபிக்கையும் மொபைல் பயனர்களால் வரும் டிராஃபிக்கையும் ஒப்பிட்டு, உங்கள் விளம்பரங்களை எதிலுள்ள பயனர்கள் அடிக்கடி கிளிக் செய்கிறார்கள் என்ற விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
உங்கள் விளம்பரங்களை மொபைலுக்கு ஏற்றவையாக மேம்படுத்தும்போது AdSense மூலம் டெஸ்க்டாப் பயனர்கள் வழியாக மட்டும் பணம் சம்பாதிக்கும் நிலை மாறி, மொபைல் பயனர்கள் வழியாகவும் அதிகமாகச் சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
4. தொடர்ந்து புதிய உள்ளடக்கத்தை உருவாக்குங்கள்.
புதிய பயனர்களை ஈர்ப்பதற்கும் முன்பு வந்தவர்களை மீண்டும் வரச் செய்வதற்கும் பெரும்பாலான வலைதளங்கள் புதிய உள்ளடக்கத்தையே சார்ந்துள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் புதிய வலைப்பதிவு இடுகைகள், புதிய விவாதங்கள் அல்லது பயனர் உருவாக்கிய புதிய உள்ளடக்கம் போன்ற வடிவங்களில் இத்தகைய உள்ளடக்கம் வெளியிடப்படுகிறது. எந்த வகை உள்ளடக்கமானாலும் அதை அடிக்கடி உருவாக்குங்கள், இதன் மூலம் பயனர்களை உங்கள் வலைதளத்திற்குத் தொடர்ந்து ஈர்ப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.
புதிய உள்ளடக்கம் வலைதளத்திற்குத் தொடர்ந்து டிராஃபிக்கைக் கொண்டுவருவதை உறுதிப்படுத்த, Google வலைநிர்வாகி வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அதைத் தேடல் இன்ஜின்களுக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும். இதற்கு நீங்கள் Google AdWords Keyword Planner மூலம் ஆய்வு செய்து, அதன் மூலம் கிடைத்த தேடல் குறிப்பையே பயன்படுத்த வேண்டும். எந்த அளவிற்கு மேம்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தை உருவாக்குகிறீர்களோ அந்த அளவிற்குப் பயனர்கள் மூலம் நீண்ட காலம் அதிகப்படியான டிராஃபிக்கைப் பெறுவீர்கள்.
புதிய உள்ளடக்கத்தை உருவாக்குவதோடு பயனர்களை உங்கள் வலைதளத்திற்கு மீண்டும் வரச் செய்வதற்கான வழியையும் உருவாக்குங்கள். மின்னஞ்சல் மூலமாகவோ சிறந்த சமூக வலைதளங்கள் மூலமாகவோ உங்கள் வலைதளத்திற்குக் குழுசேருமாறு பயனர்களை ஊக்குவிக்கவும், இதன் மூலம் சமீபத்திய உள்ளடக்கத்தை அவர்களிடையே விளம்பரப்படுத்த முடியும். உங்கள் உள்ளடக்கம் ரசிகர்களை எளிதாகச் சென்றடையும் வழிகளைக் கொண்டிருப்பதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதனால் வலைதளத்திற்கு அவர்களை அடிக்கடி வரச்செய்து விளம்பரங்களை அதிகமாகக் கிளிக் செய்ய வைப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.
5. உள்ளடக்கத்தையும் வலைதளத்தையும் தொடர்ந்து விளம்பரப்படுத்துங்கள்.
Google AdSense மூலம் நல்ல வருவாயைத் தொடர்ந்து பெற விரும்பினால் உங்கள் உள்ளடக்கத்தையும் வலைதளத்தையும் தொடர்ந்து விளம்பரப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். எப்போதும். வலைதளத்தை விளம்பரப்படுத்தும்போது Google வலைநிர்வாகி வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதோடு Google AdSense கொள்கைகளை மீறவும் கூடாது என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
உள்ளடக்கத்தையும் வலைதளத்தையும் வழக்கமான வழிமுறைகளில் விளம்பரப்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள். நீங்கள் சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தால் அவற்றுக்கான உங்கள் சுயவிவரங்களில் வலைதளத்தின் இணைப்புகளைச் சேருங்கள். மற்றவர்களுடனான தொடர்பை மேம்படுத்தி அவர்களுடன் நீங்கள் சிறந்த உறவை வளர்த்து வந்தால் பொதுமக்கள் உங்களுடன் அதிகமாகத் தொடர்புகொள்வதோடு வலைதளத்தை அடிக்கடி கிளிக் செய்து உங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் விரும்புவார்கள்.
மேலும் உங்கள் வலைதளத்தின் தலைப்போடு பொருந்திவரும் சமூக வலைதளக் குழுக்களிலும் மன்றங்களிலும் சேர்ந்து அவற்றின் உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். குறிப்பிட்ட காலகட்டத்தில் உங்கள் வலைதளம் பயனர்களின் கேள்விகளுக்குத் தொடர்புடைய பதில்களை வழங்கும் ஆதாரமாவதற்கோ உங்களுடன் தொடர்பு கொள்வோர் உங்கள் சுயவிவரத்தைப் பார்த்து உங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வலைதளத்தைக் கிளிக் செய்வதற்கோ வாய்ப்புள்ளது.
குறிப்பாக உங்கள் வலைதளத்தின் தலைப்பு குறித்து எழுதும் வலைப்பதிவர்களுடன் தொடர்புகொள்வதை உறுதிசெய்யுங்கள். வலைப்பதிவுகளில் கருத்து தெரிவிப்பது, சமூக வலைதளங்களில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது போன்ற செயல்களின் மூலம் அவற்றின் உறுப்பினர்களுடன் சிறந்த உறவுகளை வளர்த்துக்கொண்டால் அவர்களின் வலைப்பதிவு இடுகைகளில் உங்கள் வலைதளம் குறித்து எழுதுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.