ஆதாரம்
AdSense மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு உங்கள் வலைதளத்திற்குச் சிறந்த வடிவத்தை அளிப்பது எப்படி?
உங்கள் AdSense வருமானத்தை அதிகரிக்க வேண்டுமா? AdSense மூலம் பணம் சம்பாதிக்கும்பொருட்டு உங்கள் வலைதளத்திற்குச் சிறந்த வடிவத்தை அளிக்க இங்குள்ள நான்கு உதவிக்குறிப்புகளைப் பாருங்கள்.
Google AdSense மூலம் பணம் சம்பாதிக்க வலைதளம் தொடங்கத் திட்டமிட்டுள்ளீர்களா? இல்லையெனில் உங்கள் Google AdSense வருவாயை அதிகரிப்பது எப்படி எனும் யோசனையா? அப்படியானால் AdSenseஸை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்தவும் அதன் மூலம் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் உதவும்பொருட்டு உங்கள் வலைதளத்திற்குச் சிறந்த வடிவத்தை அளிப்பதற்கான சில உதவிக்குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1. தனித்துவமான, மதிப்புமிக்க உள்ளடக்கத்தை உருவாக்குங்கள்.
உங்கள் வலைதளத்தை Google AdSenseஸுடன் இணைக்கத் தொடங்கும்போது ஆரம்பத்தில் அது அங்கீகரிக்கப்படலாம், ஆனால் அதன் தரத்தை உறுதிசெய்வதற்காகப் பின்னர் மதிப்பாய்வு செய்யப்படும். இதை வேறு விதமாகக் கூறினால் உங்கள் வலைதளத்தின் 100 பக்கங்களில் தரம் குறைந்த உள்ளடக்கத்தை நிரப்பிவிட்டு அவற்றை அட்டவணைப்படுத்தி லாபம் பெற முடியாது.
அதற்கு பதிலாக முதலில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான தலைப்பைக் கண்டறிந்து அதே தலைப்பில் அதிக ஈடுபாடுள்ள மற்றவர்களையும் கண்டறியுங்கள். பிறகு அந்தத் தலைப்பு குறித்து நிறைய விஷயங்களைப் படித்துத் தெரிந்துகொள்ள நினைக்கும் மற்ற பயனர்களுக்காக சிறப்பான உள்ளடக்கத்தை உருவாக்கும் பொருட்டு அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்.
2. பயனர்களை ஈர்க்கும்படியான வலைதளத்தை உருவாக்குங்கள்.
உங்கள் வலைதளத்திற்கு வரும் பயனர்கள் அப்போதே உங்கள் AdSense விளம்பரங்களைக் கிளிக் செய்யாமல் போகக்கூடும். ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு அவர்கள் வெளியேறும் பட்சத்தில் அவர்களையும் அவர்கள் மூலம் கிடைத்திருக்கக்கூடிய AdSense வருவாயையும் நீங்கள் இழக்க நேரிடும். அதனால்தான் பயனர்களை ஈர்க்கும்படியான வலைதளத்தை உருவாக்குவது அவசியமாகிறது.
உங்கள் வலைதளத்திற்கு வரும் பயனர்கள் ஒவ்வொருவரையும் மீண்டும் அதற்கு வரச் செய்து அதிலுள்ள உள்ளடக்கம் அனைத்தையும் ஆழமாகப் படிக்கச் செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம். இதைச் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. வலைதளத்தைத் தொடங்கும்போது அதன் சிறந்த பகுதிகளைப் பயனர்கள் எளிதாகக் கண்டறியும் விதத்தில் மேற்பகுதியில் தெளிவான வழிசெலுத்தலை உருவாக்குங்கள்.
அடுத்ததாக உங்கள் உள்ளடக்கத்தின் ஒவ்வொரு பகுதியும் தொடர்புடைய வெவ்வேறு உள்ளடக்கத்துடன் இணைப்புகளைக் கொண்டிருப்பதை உறுதிசெய்யுங்கள். இதன் மூலம் உங்கள் வலைதளத்திற்கு வரும் பயனர் தான் பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை ரசிக்காதபட்சத்தில் தனக்கு ஆர்வமுள்ள வேறொரு தலைப்பின் இணைப்பைப் பார்க்கக்கூடும்.
இறுதியாக, பக்கப்பட்டியிலும் உள்ளடக்க இணைப்புகள் அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வலைதளத்தில் எது மிகவும் பிரபலமான உள்ளடக்கம், எது அதிகம் பகிரப்பட்டுள்ளது, எதற்கு அதிகப்படியான கருத்துகள் வந்துள்ளன என்பதையெல்லாம் உங்கள் பயனர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். குறிப்பிட்ட உள்ளடக்கம் ஏன் பிரபலமாக உள்ளது என்பதை அறியும் ஆர்வத்தில் பயனர்கள் வலைதளத்தை நீண்ட நேரம் பார்ப்பார்கள். பயனர்கள் உங்கள் பக்கங்களை எந்த அளவிற்கு அதிகமாகப் பார்க்கிறார்களோ அந்த அளவிற்கு விளம்பரங்களையும் பார்ப்பார்கள், இதனால் Google AdSense மூலம் உங்களுக்கு அதிக வருவாய் கிடைப்பதற்கான சாத்தியக்கூறு உருவாகும்.
3. உங்கள் வலைதளத்திற்கு அடிக்கடி பயனர்கள் வருமாறு செய்ய பல்வேறு வழிகளை உருவாக்குங்கள்.
உங்கள் வலைதளத்தைப் பயனர்கள் மறந்துவிடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். பயனர்கள் உங்கள் வலைதளத்தைப் பின்தொடரும் விதத்தில் அவர்கள் உங்களுடன் தொடர்புகொள்வதற்கான பல்வேறு வழிகளைத் தலைப்பு, பக்கப்பட்டி, உள்ளடக்க முடிவு, அடிக்குறிப்பு உள்ளிட்ட பொருத்தமான இடங்களில் வழங்குங்கள். பயனர்கள் உங்களுடன் தொடர்புகொள்வதற்கான மின்னஞ்சல் முகவரிகள், சமூக வலைதளங்களுக்கான இணைப்புகள் போன்றவற்றை இந்த இடங்களில் சேருங்கள். உள்ளடக்கத்தைப் புதிதாக உருவாக்கும்போதோ விளம்பரப்படுத்தும்போதோ இந்த இணைப்புகளின் மூலம் அதைக் குறித்துப் பயனர்களுக்கு நினைவூட்ட முடியும் என்பதால் வலைதளத்திற்கு அவர்களை மீண்டும் வரச் செய்து அதில் அதிகமான AdSense விளம்பரங்களைக் கிளிக் செய்ய வைப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.
4. சிறந்த பயனர் அனுபவம் கிடைக்குமாறு வலைதளத்தை மேம்படுத்துங்கள்.
தங்கள் வலைதளங்களில் சிறந்த பயனர் அனுபவத்தை வழங்க இயலாததே பல வலைதள உரிமையாளர்களை மிக மோசமாகப் பாதிக்கும் விஷயமாக உள்ளது. உங்களிடம் மிகச் சிறந்த உள்ளடக்கமும் விளம்பரக் காட்சிப்படுத்துமிடமும் இருக்கக்கூடும், ஆனால் வலைதளம் மொபைல் சாதனங்களுக்குப் பொருந்துபவையாக இல்லாவிட்டாலோ அவற்றில் மிக மெதுவாக ஏற்றப்பட்டாலோ அதிலுள்ள உள்ளடக்கத்தைப் பயனர்கள் படிப்பதற்கு முன்பாகவோ அதிலுள்ள விளம்பரங்களைக் கிளிக் செய்வதற்கு முன்பாகவோ அவர்கள் வெளியேறிவிடக்கூடும். இதனால் உங்கள் வலைதளத்தின் பார்வையாளர்களை இழக்க நேரிடும்.
அதனால்தான் உங்கள் வலைதளத்தைப் பொறுத்தவரை பின்வரும் இரண்டு விஷயங்களைச் செய்வது அவசியமாகிறது. முதலாவதாக, உங்கள் வலைதளம் மொபைல் பயனர்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பாகச் செயல்படுவதையும் வலைதளத்தின் பக்கங்கள் விரைவாக ஏற்றப்படுவதையும் உறுதிசெய்ய Google மூலம் எனது வலைதளத்தைச் சோதனை செய்தல் மூலம் சில எளிய சோதனைகளை இயக்குங்கள். உங்கள் வலைதளத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் இந்த இரண்டு வழிமுறைகள் மூலம் அவற்றைக் கண்டறிந்து சரிசெய்து கொள்ளலாம்.
இரண்டாவதாக, Google Analytics , Google Search Console ஆகியவற்றுக்கு ஏற்கெனவே பதிவு செய்திருக்காவிட்டால் இப்போது பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் வலைதளத்திற்கு வரும் டிராஃபிக்கின் நிலைகளைக் கண்காணிக்க Google Analytics உதவும். இதன் மூலம் உங்களுக்கான வருமானம் குறைந்தால் அதை உடனடியாகப் பார்க்க முடியும். உங்கள் இணையதளத்தில் ஏதேனும் செயல்திறன் சார்ந்த சிக்கல்களோ பயனர்களுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தும் வேறு பிழைகளோ இருந்தால் அவற்றைக் கண்டறிய Google Search Consoleலில் உள்ள பல்வேறு கருவிகள் உதவும்.