ஆதாரம்

ஓர் இணையதளத்தை உருவாக்குவது எப்படி?

தகவல்களைக் கொண்ட படம்
சிறந்த நடைமுறைகள்

உங்கள் ஆர்வத்தைப் பகிர்தல், சமூகத்தை உருவாக்குதல், உங்கள் பிசினஸை விளம்பரப்படுத்துதல் போன்ற பல காரணங்களுக்காக நீங்கள் சொந்தமாக இணையதளம் வைத்துக்கொள்ள விரும்பலாம்.

உங்கள் வலைதளம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் என்னென்ன அம்சங்களும் உள்ளடக்கமும் அதில் காட்டப்பட வேண்டும் என்பது குறித்தும் ஏற்கெனவே யோசித்து வைத்திருக்கலாம்.

தொடங்குவதற்கு முன்பு, அவற்றை நிறைவேற்றுவதற்கான சில முக்கிய வழிமுறைகள் குறித்தும் அவற்றை எப்படித் தொடங்குவது என்பது குறித்தும் உங்கள் யோசனைகளைச் செயல்படுத்த எவ்வளவு செலவாகும் என்பது குறித்தும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

முதலில் உங்களுக்கான இலக்கை அமைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் இணையதளத்தின் முக்கிய நோக்கம் என்ன? வலைப்பதி்விடுவது முக்கிய நோக்கமாக இருந்தால், அதற்கேற்ப தளவமைப்பையும் வழிசெலுத்தலையும் நீங்கள் அமைக்க வேண்டியிருக்கும். உங்கள் வலைதளத்தைப் பயன்படுத்தி தயாரிப்புகளையோ சேவைகளையோ விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தால் பாதுகாப்பான, வழிசெலுத்த எளிதான மற்றும் கையிருப்பில் உள்ளவற்றை அவ்வப்போது புதுப்பிக்கத்தக்க ஒரு வலைதளம் உங்களுக்குத் தேவை.

உங்கள் பட்ஜெட்டைக் கவனமாக உருவாக்குங்கள்

ஓர் இணையதளத்தை உருவாக்குவதற்கான செலவு பூஜ்ஜியம் முதல் ஆயிரக்கணக்கான ரூபாய் வரை இருக்கும். நீங்கள் என்ன வகையான வலைதளத்தை உருவாக்க விரும்புகிறீர்கள் மற்றும் அதன் மூலம் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள் என்பதைப் பொறுத்து இந்தச் செலவு மாறுபடும்.

எளிமையான வலைப்பதிவு வலைதளத்தை உருவாக்க விரும்புகிறீர்கள் எனில், அதை உருவாக்குவதற்கு ஏராளமான கருவிகளும் விருப்பத்தேர்வுகளும் இலவசமாகக் கிடைக்கின்றன. பெரும்பாலானவை எளிமையானவையாகவும் எளிதில் கையாளக்கூடியவையாகவும் இருப்பதால் ஒரு வலைப்பதிவு வலைதளத்தை உருவாக்க உங்களுக்கு வடிவமைப்பு அல்லது கோடிங் அனுபவம் எதுவும் தேவையில்லை. இவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள சிறந்த விஷயம் என்னவென்றால், நீங்களே உடனடியாக ஒரு வலைப்பதிவு வலைதளத்தை உருவாக்கி வெளியிடலாம். வலைதள வடிவமைப்பாளருக்காகவோ டெவெலப்பருக்காகவோ செலவிடத் தேவையில்லை.

சரியான வலைதளப் பிளாட்ஃபார்மைத் தேர்வுசெய்யுங்கள்

பெரும்பாலானவர்களுக்கு தங்களின் சொந்த வலைதளத்தை உருவாக்குவதற்கான நேரமோ நிபுணத்துவமோ இருப்பதில்லை. அவர்களுக்காகவே வலைதள உருவாக்கக் கருவிகள் உள்ளன. இந்தக் கருவிகளில் கோடிங் அனைத்தும் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும். ஒரு டெம்ப்ளேட்டைத் தேர்வுசெய்து அதில் உங்களின் சொந்த வார்த்தைகளையும் படங்களையும் சேர்த்து, இறுதிகட்டத் திருத்தங்களைச் செய்து பிரத்தியேகமாக்கி வெளியிடலாம்.

எந்த வலைதள உருவாக்கக் கருவியைப் பயன்படுத்துவது என்பதைத் தேர்வுசெய்வதுதான் உண்மையில் கடினமான விஷயம். இந்தக் கருவிகளை நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் வழங்குகின்றன. முதலில் பார்க்கும்போது அவை அனைத்தும் ஒரே சேவையையோ ஒரே மாதிரியான சேவைகளையோ வழங்குவதாகத் தோன்றும்.

வழங்குநர் நிறுவனத்தைத் தேர்வுசெய்யும் முன்பு நீங்கள் கவனிக்க வேண்டியவை:

  • அந்த நிறுவனம் பாதுகாப்பான URLலை வழங்குகிறதா அல்லது பாதுகாப்பு அம்சத்தைப் பிறகு சேர்த்துக்கொள்ளும் விருப்பத்தை வழங்குகிறதா?
  • வலைதளத்தைச் சிக்கலின்றிப் பயன்படுத்த முடியுமா?
  • உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு வலைதளத்தை எளிதாகப் பிரத்தியேகப்படுத்த முடியுமா?
  • வலைதளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும்? அதற்கு ஒருமுறை கட்டணம் செலுத்தினால் போதுமா அல்லது மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டுமா?
  • தேர்வுசெய்வதற்கு நிறைய டெம்ப்ளேட்கள் உள்ளனவா?
  • தொழில்நுட்ப உதவிச் சேவையை வழங்குகிறதா? இந்தச் சேவை இலவசமாகக் கிடைக்கிறதா? மின்னஞ்சல், மொபைல், சாட்டிங் ரோபோ இவற்றில் எதன் மூலம் உதவிச் சேவை வழங்கப்படுகிறது?
  • செருகுநிரல்களையோ நீட்டிப்புகளையோ (வீடியோ, செய்திமடலுக்குப் பயனர்களைப் பதிவுசெய்ய வைத்தல் போன்றவை) அந்த நிறுவனம் வழங்குகிறதா?

உங்கள் வலைதளத்தை எந்த நோக்கத்திற்காக உருவாக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இவை அமையும். Google Blogger போன்ற கருவிகள் வெவ்வேறு டெம்ப்ளேட்களிலும் வடிவமைப்பு ஸ்டைல்களிலும் இருந்து தேர்வுசெய்வதற்கு உங்களுக்கு உதவும். மேலும் சிறிய வணிகத்தையும் நிகழ்வையும் விளம்பரப்படுத்தவோ ஒரு குறிப்பிட்ட பணியைத் தொகுத்துக் காட்டவோ Google Sites ஒரு சிறந்த வழியாகும். இந்த விரைவு வழிகாட்டியில் இது குறித்த கூடுதல் தகவல்கள் உள்ளன. நீங்கள் சரியான முடிவை எடுப்பதற்கு இவை உங்களுக்கு உதவும்.

உங்கள் வலைதளத்திற்கான டொமைன் பெயரை அமைத்தல்

சொந்தமாக டொமைன் பெயரை வாங்குவதற்கான அவசியமின்றி, எளிமையான வலைப்பதிவை செலவில்லாமல் உருவாக்க உதவும் பல இலவச வலைதள உருவாக்கக் கருவிகள் உள்ளன. தொழில்நேர்த்தியான வலைப்பதிவையோ பிசினஸிற்கான இணையதளத்தையோ உருவாக்குவது குறித்து நீங்கள் சிந்தித்தால், அதிகப் பிரத்தியேகமான மற்றும் தனித்துவமான வலைதள உருவாக்கம் உங்களுக்குத் தேவைப்படலாம்.

எந்தவிதமான முதல்நிலை டொமைனை (TLD - Top-Level Domain) தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் நீங்கள் முடிவுசெய்ய வேண்டும். உதாரணத்திற்கு, உங்கள் இணையதளத்தின் செயல்பாடு ஒரு குறிப்பிட்ட பகுதியையோ நாட்டையோ மையப்படுத்தியிருந்தால் .uk, .fr, .de, போன்ற முகவரிகளைத் தேர்வுசெய்யலாம். உங்கள் இணையதளம் உலகளாவிய இருப்பைக் கொண்டிருந்தால் .com என்ற முகவரியைத் தேர்வுசெய்யலாம்.

TLDயைத் தேர்வுசெய்யும்போது கவனிக்க வேண்டிய மற்ற விஷயங்கள்:

  • கட்டண உயர்வைக் கவனத்தில் கொள்ளவும். சில வழங்குநர்கள் முதலில் தள்ளுபடி விலைக்கு டொமைன் பெயரை வழங்கிவிட்டு, அதன் பிறகு அதற்கான கட்டணத்தை உயர்த்திவிடுவார்கள்.
  • உங்கள் டொமைன் பெயருக்கான வர்த்தக முத்திரையை வேறு யாரும் பெறவில்லை என்பதை உறுதிசெய்து கொள்ளவும். வேறொரு பிராண்டின் பதிப்புரிமையை உங்கள் டொமைன் பெயர் மீறினால், அதை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். மேலும், அதற்கான சட்டரீதியான கட்டணங்களையும் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கலாம். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு இங்கே பாருங்கள்.
  • உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். டொமைனுக்குப் பதிவு செய்யும்போது ICANNனிடம் உங்கள் விவரங்களை வழங்க வேண்டும். ஸ்பேமர்களும் ஏமாற்றுபவர்களும் அதை எளிதாக அணுக முடியும். உங்கள் விவரங்களைத் தனிப்பட்டதாக வைப்பதற்கும் நீங்கள் தேர்வுசெய்யலாம். சில டொமைன் பதிவாளர்கள் இதற்குக் கட்டணம் பெறுவார்கள் என்பதால் முதலில் அதுகுறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் டொமைன் பெயரைத் தேர்வு செய்வதற்கு Google Domains ஒரு சரியான இடமாக இருக்கலாம். எந்த டொமைன் பெயர் கிடைக்கிறது, அதன் விலை என்ன போன்ற விவரங்களையும், அதன் நன்மைகள்/குறைகள் என்னென்ன என்பதையும் Google Domains விரைவாகக் காட்டும். உதாரணத்திற்கு, நீங்கள் தேர்வுசெய்த டொமைன் பெயர் உச்சரிக்கக் கடினமாகவோ எளிதில் தவறாக ஒலிக்கக்கூடியதாகவோ இருந்தால் அது குறித்து இது குறிப்பிடும்.

உங்கள் உள்ளடக்கத்தை உருவாக்குதல்

பிளாட்ஃபார்மைத் தேர்வுசெய்து அதன் வடிவமைப்பைத் திட்டமிட்ட பிறகு, அடுத்த கட்டமாக உங்கள் பார்வையாளர்கள் விரும்பும் உள்ளடக்கத்தை உருவாக்கத் தயாராகிவிடுவீர்கள். சில அடிப்படைக் கோட்பாடுகளைப் பின்பற்றுவது உங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த உதவுவதுடன், உங்கள் வலைதளத்திற்கு மீண்டும் மீண்டும் வர பயனர்களை ஊக்குவிக்கும்.

இந்தப் பயனுள்ள உதவிக்குறிப்புகளை முயன்று பாருங்கள்.

  • பயனர்கள் இணையத்தில் எதை அதிகம் தேடுகின்றனர், குறிப்பிட்ட காலகட்டத்தில் பிரபலமான வார்த்தைகள்/வாக்கியங்கள் என்னென்ன என்பதை அறிந்துகொள்ள Google Trends உதவும். இதன் மூலம் பல்வேறு பகுதிகளில் இருப்பவர்கள் உங்கள் உள்ளடக்கத்தில் காட்டக்கூடிய ஆர்வத்தை அளவிடலாம், உலகளவில் புதிய பார்வையாளர்களைக் கண்டறியலாம். எந்த விஷயம் பிரபலமடைந்து வருகிறது அல்லது வளர்ந்து வருகிறது என்பதை அறிந்துகொள்ள, எப்போது வேண்டுமானாலும் சமூக வலைதளங்களையோ மற்ற இணைய சமூகக் குழுக்களையோ பயன்படுத்தி நீங்கள் வாக்கெடுப்புகளை நடத்தலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
  • வலைதள உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு முன்பே, எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அதை வெளியிடப் போகிறீர்கள் என்பதைத் திட்டமிட்டு, அந்தக் கால இடைவெளியைச் சரியாகப் பின்பற்றி உள்ளடக்கத்தை வெளியிடுங்கள். எண்ணிக்கையை விடத் தரமே முக்கியம் என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்.
  • உள்ளடக்கம் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லாப் பயனர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். சில பயனர்கள் வார்த்தை உள்ளடக்கத்தை விரும்புவர், சிலர் விரைவில் புரிந்துகொள்ளக்கூடிய தகவல் விளக்கப்படத்தை விரும்புவர், சிலர் எளிதாகப் பார்க்கக்கூடிய வீடியோவை விரும்புவர். காலப்போக்கில் உங்கள் வலைதளப் பயனர்களுக்கு எது பிடிக்கும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
  • உங்கள் வலைதளத்தில் உள்ளடக்கத்தை வெளியிடத் தொடங்கிய பிறகு, அதன் பயனர்கள் எங்கு வசிக்கிறார்கள், உங்கள் வலைதளத்தை எவ்வாறு கண்டறிகிறார்கள், அவர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் பக்கம் எது போன்ற விவரங்களை அறிய விரும்புவீர்கள். Google Analytics மூலமும் இவற்றை நீங்கள் அறிந்துகொள்ளலாம். அத்துடன் நிகழ்நேர முடிவுகளைத் தெரிந்துகொள்ள உங்கள் வலைப்பதிவுடன் இதை நீங்கள் நேரடியாக இணைத்துக் கொள்ளலாம்.
  • உங்கள் வலைதளப் பயனர்களுக்கு ஏற்ற உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான கூடுதல் கருவிகளும் உதவிக்குறிப்புகளும் இந்த வழிகாட்டியில் உள்ளன, அத்துடன் உலகம் முழுவதிலும் இருந்து உத்வேகமளிக்கும் வெற்றிக் கதைகளையும் இதில் நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் பயனர்களுடன் தொடர்புகொள்வதற்கும் தனிப்பட்ட/தொழில்ரீதியான இலக்குகளை அடைவதற்கும் உங்களுக்கென்று சொந்தமாக இணையதளம் இருப்பது மகிழ்ச்சியான மற்றும் பலனளிக்கும் வழியாகும். வலைதளத்தை உருவாக்கத் தொடங்குவதற்கும் பெரும் தவறுகளைத் தவிர்ப்பதற்கும் இந்த வழிகாட்டியில் உள்ள கருவிகளும் உதவிக்குறிப்புகளும் உங்களுக்கு உதவும். மேலும் இணையதளம் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வழிகளையும் உங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான வழிகளையும் எங்கள் தகவல் மையத்தின் மூலம் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.