ஆதாரம்
இணையதள டிராஃபிக்கை விரிவுபடுத்துவது எப்படி?
புதிய டிராஃபிக்கை ஈர்ப்பது எந்தவொரு இணையதளத்திற்கும் மிகவும் முக்கியமான விஷயமாகும். உங்கள் வலைதளம் அதிகப் பார்வையாளர்களைச் சென்றடைவதற்கும் அதிக ஆன்லைன் பயனர்களை ஈர்ப்பதற்கும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய செலவில்லாத சில உத்திகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
தொடங்குவதற்கு முன்பு, கூடுதல் டிராஃபிக் ஏன் தேவை என்பதை நீங்கள் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். உங்கள் சமூகத்தை விரிவாக்க விரும்புகிறீர்களா? தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்க விரும்புகிறீர்களா? பொது நல நோக்கத்திற்காகவா? பொது நல நோக்கத்திற்கானது எனில், பொருட்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை இது பெரிதும் ஈர்க்காது.
உங்கள் இலக்குகளில் தெளிவாக இருந்தால், வலைதளத்தை விளம்பரப்படுத்தவும் டிராஃபிக்கை அதிகரிக்கவும் தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
பொதுவாக, இணையதள விளம்பரப்படுத்துதலை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:
கட்டண விளம்பரங்கள்: இவை பிற பிளாட்ஃபார்ம்களிலோ இணையதளங்களிலோ நீங்கள் பணம் செலுத்திக் காட்டும் விளம்பரங்களாகும். Google Ads சேவையைப் பயன்படுத்தி Google முடிவுகளில் உங்கள் விளம்பரத்தைக் காட்டுவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
சொந்த விளம்பரங்கள்: உங்கள் மின்னஞ்சலைப் பெறுவதற்குக் குழு சேர்ந்துள்ளவர்களை செய்திகள், ஆஃபர்கள் போன்றவற்றின் மூலம் நீங்கள் அவ்வப்போது தொடர்புகொள்வதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
பிற விளம்பரங்கள்: உங்கள் வலைதளத்திற்கான இணைப்பைக் கொண்ட பிற இணையதளங்களின் (உங்கள் பிசினஸைப் பற்றிக் குறிப்பிடும் பிற வலைப்பதிவு, செய்திக் கட்டுரை போன்றவை) மூலம் வலைதளப் பயனர்களைப் பெறுவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
சில அணுகுமுறைகள் இந்த மூன்று வகைகளின் கீழும் வரும். உதாரணமாக, உங்களின் செய்திகள், பொது நலச் செயல்பாடுகள், தயாரிப்புகள் போன்றவற்றை மறு இடுகையிடும்படி கூறி உங்களைப் பின்தொடர்பவர்களுக்குப் பணம் கொடுத்துச் செய்யப்படும் சமூக வலைதள விளம்பரங்கள். பயனர்களை ஈர்க்கக்கூடிய மற்றும் அவர்களை மீண்டும் மீண்டும் வரச் செய்யக்கூடிய சிறந்த உள்ளடக்கம்தான் இந்த மூன்று வகை விளம்பரங்களுக்கும் தேவை.
சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான பயனுள்ள உதவிக்குறிப்புகள்
ஈடுபாட்டை அதிகரிக்கக்கூடிய உள்ளடக்கத்தை வெவ்வேறு வழிகளில் நீங்கள் உருவாக்கலாம். உதாரணத்திற்கு, நீங்கள் உணவு வலைப்பதிவராக இருந்தால், உள்ளூர்ச் சமையல் நிபுணர்களைச் சந்தித்து அவர்களின் ஸ்பெஷலான விடுமுறைக்கால உணவை எவ்வாறு சமைக்க வேண்டும் என்று நேர்காணல் செய்யலாம். அல்லது நீங்கள் திருமண ஏற்பாட்டாளராக இருந்தால், பயனர்களுக்கு உதவக்கூடிய தனித்துவமான உள்ளடக்கத்தையோ புள்ளிவிவரங்களையோ உருவாக்கலாம். அடுத்த ஆண்டு எவ்வளவு திருமணங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, பிரபலமடைந்து வரும் புதிய மணப்பெண் மேக்-அப் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். Twitter வாக்கெடுப்பை நடத்தி, அதிலிருந்து என்ன அறிந்துகொண்டீர்கள் என்பதை வெளியிடலாம்.
உங்கள் அணுகுமுறை எதுவாக இருந்தாலும் உங்கள் உள்ளடக்கம் பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதாகவும் எளிதில் புரிந்துகொள்ளும்படியும் இருந்தால், அதிகப் பயனர்கள் அதைப் பார்க்கவும் பகிரவும் செய்வார்கள். கவனத்திற்கு: அத்துடன் புதிய உள்ளடக்கத்தை உங்கள் வலைதளத்தில் சேர்த்த பிறகு, பொருந்தும் பட்சத்தில் முந்தைய உள்ளடக்கத்திற்கான இணைப்புகளைச் சேர்க்க வேண்டும். அதேபோன்று முந்தைய உள்ளடக்கத்தில் புதிய உள்ளடக்கத்திற்கான இணைப்புகளைச் சேர்க்க வேண்டும். சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குவது குறித்த கூடுதல் உதவிக்குறிப்புகள் சிலவற்றை இங்கு வழங்கியுள்ளோம்.
டிராஃபிக்கை அதிகரிப்பதற்கான வழிகள்
உங்கள் உள்ளடக்கத்தைத் தயார் செய்த பிறகு, அதைச் சரியான பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
1. இயல்பான சமூக வலைதளங்கள்
உங்கள் வலைதளப் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் டிராஃபிக்கையும் அதிகரிக்க இது மிகவும் பயனுள்ள வழியாகும். உங்கள் பார்வையாளர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளப் பிளாட்ஃபார்ம்களை ஆராய்ந்து கண்டறிவது இதில் முக்கியமானது. இதைச் செய்வதற்கு, ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களிடமோ சமூகத்திடமோ கேட்கலாம் அல்லது Google Searchசில் தேடலாம். இவ்வாறு செய்தால் பயனர்களுக்குப் பிடித்தமான உள்ளடக்கம் குறித்தும் அதை அவர்கள் எங்கே பார்க்கிறார்கள் என்பது குறித்தும் விரைவில் அறிந்துகொள்வீர்கள். உதாரணத்திற்கு, பின்னலாடை உருவாக்குவது தொடர்பாக நீங்கள் வலைப்பதிவிட்டால், அது தொடர்பான உதவிக்குறிப்புகளைப் பயனர்கள் YouTubeல் தேடுவதையும் தாங்கள் புதிதாக உருவாக்கியவற்றை Instagramமில் இடுகையிட்டு அதுகுறித்துக் கலந்துரையாடுவதையும் நீங்கள் பார்க்கலாம்.
சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி டிராஃபிக்கைப் பெற நீங்கள் முடிவுசெய்தால், சீரான கால இடைவெளியில் இடுகையிடத் திட்டமிடுங்கள். மேலும் ஒவ்வொரு பிளாட்ஃபார்முக்கும் ஏற்ற உள்ளடக்கத்தை உருவாக்குவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, Twitter இடுகைகள் 280 எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும். YouTube Shorts வீடியோக்கள் 60 வினாடிகளுக்குள் இருக்க வேண்டும். மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்கள் உள்ளடக்கம் பயனர்களைக் கவரும் விதத்தில் இருக்க வேண்டும். உள்ளடக்கத்தை வெறும் வார்த்தைகளாக இடுகையிடுவதற்குப் பதிலாக, பக்கத்தை ஸ்க்ரோல் செய்யும்போது பயனர்களைக் கவரும்படியும் இடுகையைப் பகிரத் தூண்டும்படியும் எளிய கிராஃபிக்ஸுடன் உள்ளடக்கத்தை இடுகையிடுங்கள்.
அதேபோன்று சமூக வலைதளங்கள் மூலம் உங்கள் வலைதளத்தைப் பகிரும்போது அது தோன்றும் விதத்தை மேம்படுத்த, சமூக வலைதளங்களின் 'மேலதிகத் தகவல்கள்' அம்சத்தைப் பயன்படுத்துங்கள். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு இங்கு பாருங்கள்.
இறுதியான ஆனால் மற்றொரு முக்கியமான விஷயம், ஒருபோதும் தயங்காதீர்கள். உங்களுக்கு ஆர்வமுள்ள அல்லது நீங்கள் நிபுணத்துவம் பெற்றுள்ள தலைப்பு குறித்துப் பயனர்கள் கலந்துரையாடும்போது அதில் பங்கேற்று உங்களின் கருத்தை வெளிப்படுத்துங்கள்.
2. மின்னஞ்சல் முகவரிகளின் பட்டியல்கள்
உங்கள் வலைதளம் பிரபலமடையும்போது பயனர்களின் மின்னஞ்சல் முகவரியைக் கேட்பதன் மூலம் அவர்களுடன் நீங்கள் தொடர்பில் இருக்க முடியும். அவ்வாறு பெறுவதற்கு முன்பு, பயனர்கள் அதனால் என்ன பலனடைவார்கள் (இலவச வழிகாட்டி, ஸ்பெஷல் ஆஃபர், உங்கள் செய்திகளின் மாதாந்திர ரவுண்ட்-அப் போன்றவை) என்பதை விளக்குவது முக்கியம்.
நீங்கள் எதை வழங்க முடிவு செய்தாலும் உங்கள் உள்ளடக்கத்தின் ஸ்டைலும் கால இடைவெளியும் சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மேலும், பயனர்களை உங்கள் வலைதளத்திற்கு வரவழைக்கும் செயலழைப்பு பட்டன்களை உங்கள் மின்னஞ்சலில் மறக்காமல் சேருங்கள். பயனுள்ள உதவிக்குறிப்பு: உங்கள் வலைதளப் பார்வையாளர்களுக்கு அதிகப்படியான மின்னஞ்சல்களை அனுப்பாதீர்கள். சில நாடுகளில் இது சட்டவிரோதமானது. மேலும் இது பார்வையாளர்களை உங்கள் வலைதளத்திற்கு வர விரும்பாமல் செய்து அவர்களைக் குழுவிலகவும் செய்துவிடும்.
3. தேடல் இன்ஜினை மேம்படுத்துதல் (SEO - Search Engine Optimization)
SEO என்பது தேடல் இன்ஜின் முடிவுகளில் உங்கள் வலைதளத்தை முதலில் காட்டுவதற்கு உதவும் பயனுள்ள கருவியாகும். மேலும் இது வலைதளத்திற்குப் புதிய டிராஃபிக்கையும் உருவாக்கும். புதிய மற்றும் வரவேற்பைப் பெறும் உள்ளடக்கத்தை உருவாக்குவதே உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும் – அதைத் தொடங்குவதற்கு Google Trends சிறந்த இடமாக இருக்கும். இதில் நீங்கள் அறிந்துகொள்ள விரும்பும் தலைப்பை (எ.கா. யோகா) உள்ளிட்டு, காலப்போக்கில் அந்தத் தலைப்பின் மீதான தேடல் ஆர்வம் எவ்வளவு மாறியுள்ளது என்று பார்க்கலாம். மேலும், பயனர்கள் தேடிய தொடர்புடைய பிற தலைப்புகளையும் தேடல் வார்த்தைகளையும் (எ.கா. "அஷ்டாங்க யோகா", "யோகா தினம்") பார்க்கலாம். இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உங்கள் வலைதளத்தின் கட்டுரைகளையும் வலைப்பதிவுகளையும் உருவாக்கலாம். இதனால் பயனர்கள் ஆன்லைனில் தேடும்போது, உங்கள் இணையதளம் முதலில் காட்டப்பட அதிக வாய்ப்புள்ளது.
பயனுள்ள உதவிக்குறிப்பு: Googleளும் பிற தேடல் இன்ஜின்களும் கிரால் செய்து இன்டெக்ஸ் செய்யும்படி உங்கள் வலைதளத்தை அமைப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இந்த SEO ஆரம்பநிலை வழிகாட்டியைப் பயன்படுத்துங்கள் அல்லது எங்களின் வலைக்கல்வி வீடியோவைப் பாருங்கள். நீங்கள் வெளியீட்டாளர் எனில் மொபைல் வலைதளங்கள், பக்கங்களாகப் பிரித்தல், நகல் உள்ளடக்கம் மற்றும் பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் இந்த வலைக்கல்வி வீடியோவையும் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம்.
உங்கள் வலைதளம் பிரபலமடையும்போது வெளிநாட்டுப் பயனர்களுக்கு வலைதளத்தை விரிவுபடுத்தி அதிக டிராஃபிக்கைப் பெற முயலுங்கள் – இந்தப் புதிய பார்வையாளர்களுக்கு உங்கள் உள்ளடக்கத்தை உள்ளூர்மயமாக்குவது எப்படி என்பதை இந்த வழிகாட்டியில் வழங்கியுள்ளோம்.
4. இலவசச் செய்திப்படுத்துதல்
இலவசச் செய்திப்படுத்துதல் என்பது வலைதள டிராஃபிக்கைப் பெறுவதற்கான மற்றொரு அணுகுமுறையாகும். இதைச் செய்யத் தொடங்குவதற்கு, ஒரு பத்திரிக்கை வெளியீட்டை நீங்கள் உருவாக்க வேண்டும். உங்கள் பார்வையாளர்கள் ஆர்வம் கொண்ட எந்தவொரு விஷயமாகவும் அது இருக்கலாம், முடிந்தவரை அது தனித்துவமானதாகவும் உங்கள் நோக்கத்தை அடைய உதவுவதாகவும் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் சமையல் வலைப்பதிவராக இருந்து அதில் விடுமுறைக்கால உணவுகளுக்கான சமையல் குறிப்புகளை வெளியிடவுள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்களின் ரெசிபிகள் அனைத்தும் 'வீகன்' என்றோ உங்கள் பாட்டியின் ஸ்பெஷல் ரெசிபிகள் என்றோ ஹைலைட் செய்து காட்டலாம்.
நீங்கள் என்ன எழுதவுள்ளீர்கள் என்பது குறித்தும் தனித்துவமான விஷயங்கள் குறித்தும் தெளிவாக முடிவெடுத்த பிறகு, அதைப் படிப்பதற்கு ஆர்வமுள்ளவர்கள் குறித்து நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உங்கள் வலைப்பதிவைப் பொறுத்தவரை, உணவு வலைப்பதிவர்கள், சமையல் வலைதளம் வைத்துள்ளவர்கள், Twitterரில் உள்ள வீகன் பிரபலம் போன்றவர்கள் உங்கள் வலைப்பதிவைப் படிக்கலாம். உங்கள் பத்திரிக்கை வெளியீட்டை எங்கு அனுப்ப வேண்டும் என உங்களுக்குத் தெரியாவிட்டால், Google தேடலைப் பயன்படுத்தி இலவசப் பத்திரிக்கை வெளியீட்டு விநியோகச் சேவையைக் கண்டறிய முயலுங்கள்.
சிறந்த பத்திரிக்கை வெளியீட்டை உருவாக்குவதற்கான பயனுள்ள உதவிக்குறிப்புகள்:
- வாசகர்கள்/பத்திரிக்கையாளர்கள்/வலைப்பதிவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் தலைப்பை எழுதுங்கள்.
- விஷயத்தை நேரடியாகக் கூறுங்கள். நீங்கள் என்ன வழங்குகிறீர்கள்? உங்கள் தயாரிப்பின் உபயோகம் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?
- உங்கள் கட்டுரைக்கு அழுத்தமான கோணத்தையோ தொடக்கத்தையோ கண்டறியுங்கள். எ.கா. "இந்த விடுமுறைக் காலத்தில், பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த 5 நபர்களில் ஒருவர் தனது குடும்பத்திற்கு வீகன் உணவையே சமைப்பார்
- முடிந்தால் நீண்ட பத்திகளுக்குப் பதிலாக, பொட்டுக்குறிகளைப் பயன்படுத்தி விஷயங்களைக் குறிப்பிடுங்கள். இது பயனர்கள் விரைவாக வாசிக்க உதவும்.
அனைத்திற்கும் மேலாக, உங்கள் பத்திரிக்கை வெளியீடுகளை விளம்பரப்படுத்தும்போது பொறுமையாக இருங்கள். உடனடியாக நல்ல முடிவுகளை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கட்டுரையைப் பிரபலமடையச் செய்ய பலமுறை முயல வேண்டியிருக்கலாம். அத்துடன் உங்கள் கண்ணோட்டத்துடன் யாரெல்லாம் ஒத்துப்போகின்றனர் என்பதைக் கண்டறிந்து அவர்களுடன் உறவுகளைக் கட்டமைக்க சற்று நேரம் எடுக்கும்.
உங்கள் வலைதளத்திற்கு அதிக டிராஃபிக்கைப் பெறத் தயாரா?
மேற்கண்ட உத்திகள் அனைத்தும் உங்களுக்கு உதவலாம் என்றாலும், இப்போதைக்கு ஏதேனும் ஓர் உத்தியைத் தேர்வுசெய்யுமாறு பரிந்துரைக்கிறோம் - அதன் பிறகு உங்கள் வலைதளப் பகுப்பாய்வைப் பயன்படுத்தி அந்த உத்தியால் ஏற்பட்டுள்ள விளைவுகளைக் கண்காணியுங்கள். நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் விஷயத்தில், சில அணுகுமுறைகள் மற்றவற்றை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாம். எனினும் உங்களுக்கு ஏற்ற அணுகுமுறை என்ன என்பதையும் எந்த அணுகுமுறையின் மூலம் பார்வையாளர்கள் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதையும் விரைவில் பார்ப்பீர்கள். மேலும், உங்கள் வலைதளத்திற்கான புதிய பயனர்களை விரைவில் வரவேற்கத் தொடங்கிவிடுவீர்கள். அத்துடன் உங்கள் இலக்குகளை அடைவதற்கான சரியான பாதையில் இருப்பீர்கள்.