ஆதாரம்

வலைப்பதிவின் மூலமாகப் பணம் ஈட்டுவது எப்படி?

ஆதாரப் படம்
தொடங்கும் முறை

வலைப்பதிவின் மூலம் லாபம் பெறுவதற்குப் பல வழிகள் உள்ளன. உங்கள் வலைப்பதிவிலிருந்து பணம் சம்பாதிக்க வெவ்வேறு ஆன்லைன் வருவாய் வழிமுறைகளையும் பிரபலமான உத்திகளையும் பாருங்கள்.

நீங்கள் ஒரு வலைப்பதிவையோ வலைதளத்தையோ நடத்தி வந்தாலோ - அல்லது விரைவில் தொடங்கத் திட்டமிட்டு இருந்தாலோ - அதன் மூலம் எளிதில் பணம் ஈட்டலாம். வலைப்பதிவின் மூலம் லாபம் பெறுவதற்குப் பல வழிகள் உள்ளன. டிஜிட்டல் உள்ளடக்கத்தின் மூலம் லாபம் பெறுவதற்கான பிரபல உத்திகளையும் வெவ்வேறு ஆன்லைன் வருவாய் முறைகளையும் பற்றி இந்தச் செய்திக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

அடிப்படையிலிருந்து துவங்குவோம். லாபம் பெறுதல் என்றால் என்ன? எளிதில் சொல்வதென்றால், உங்கள் தளத்தின் மூலம் நீங்கள் பணம் ஈட்டுவதே லாபம் பெறுதல் என்பதாகும். அதாவது, உங்கள் வலைப்பதிவிலுள்ள ஆன்லைன் உள்ளடக்கத்தின் மூலம் வருவாய் பெறுவதை லாபம் பெறுதல் எனலாம்.

உங்கள் வலைப்பதிவின் மூலம் பணம் பெறுதலைத் தொடங்க பல்வேறு ஆன்லைன் வணிக முறைகள் உள்ளன:

  • விளம்பரங்கள்
  • துணை மார்க்கெட்டிங்
  • பொருட்கள் அல்லது டிஜிட்டல் தயாரிப்புகளை விற்பது
  • சந்தாக்கள்
  • பயிற்சி வழங்குதல்

இவற்றை உங்களுக்கும் உங்கள் வலைப்பதிவுக்கும் எவ்வாறு பயன்படுத்துவது? லாபம் பெறுதலுக்கான ஒவ்வொரு முறையையும் பற்றி இன்னும் விரிவாகக் காண்போம்.

விளம்பரங்களின் மூலம் லாபம் பெறுதல்: உங்கள் வலைப்பதிவில் விளம்பரங்களைக் காண்பித்துப் பணம் ஈட்டுதல்

ஆதாரம் உட்பொதிந்த படம்

ஒரு வலைப்பதிவு வெளியீட்டாளராக, உங்கள் ஆன்லைன் உள்ளடக்கத்தின் மூலம் வருவாய் ஈட்ட விளம்பரங்கள் நல்ல வழியைத் தரும். உங்கள் வலைதளப் பார்வையாளர்களிடம் தங்களது பொருட்கள்/தயாரிப்புகளைக் காண்பிக்க விளம்பரதாரர்கள் உங்களுக்குப் பணம் அளிக்கத் தயாராக உள்ளனர். அதிகம் விற்பனையாகும் செய்தித்தாளில் விளம்பரத்தை வெளியிடுவதற்கு அதிகக் கட்டணம் கேட்பதுபோல், நீங்களும் உங்கள் வலைதளத்தையும் அதன் உள்ளடக்கத்தையும் பிரபலமாக வைத்திருந்தால் அதிகம் பணம் ஈட்ட முடியும்.

உங்கள் உள்ளடக்கத்தின் அருகே விளம்பரங்களைக் காண்பிக்க விரும்பும் வணிகங்களுக்கு உங்கள் வலைதளத்தில் விளம்பரம் செய்வதற்கான இடத்தை நீங்களே வழங்கலாம். இதுவே நேரடி டீல் எனப்படும். உங்கள் சார்பாக உங்களது விளம்பரப் பகுதியை விற்பதற்கு Google AdSense போன்ற விளம்பர நெட்வொர்க்கையும் பயன்படுத்தலாம்.

உங்கள் வலைப்பதிவின் ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் இருக்கும் உள்ளடக்கத்திற்குப் பொருத்தமான விளம்பரங்களை AdSense வழங்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் வலைப்பதிவு சாகசப் பயணத்தைப் பற்றியதாக இருந்து அதில் நீங்கள் சிம்லா பயணம் தொடர்பான இடுகையை சமீபத்தில் பதிவேற்றி இருந்தீர்கள் எனில், பயணக் காப்பீடு, ஹிமாச்சலப் பிரதேசம் அல்லது கம்பளி ஆடை பற்றிய விளம்பரத்தை AdSense காட்டக்கூடும். விளம்பரத்தைப் பார்வையாளர் பார்க்கும்போதோ அதனைக் கிளிக் செய்யும்போதோ விளம்பரம் காண்பிக்கப்படும் தளத்தின் உரிமையாளர் என்கிற முறையில் உங்களுக்கு AdSense பணம் அளிக்கும்.

உங்கள் வலைப்பதிவின் உள்ளடக்கத்திற்கும் வாசகர்களுக்கும் ஏற்றதாக ஆன்லைன் விளம்பரங்கள் இருக்கும்பட்சத்தில், பல விளம்பரதாரர்கள் உங்கள் விளம்பரப் பகுதிக்கு அதிக விலையைக் கொடுக்கத் தயாராக இருப்பார்கள்.

துணை மார்க்கெட்டிங்: தயாரிப்புகளைப் பரிந்துரைப்பதன் மூலம் வருமானம் பெறுதல்

ஆதாரம் உட்பொதிந்த படம்

வேறொரு தளத்தில் விற்பனைக்கு உள்ள தயாரிப்பு அல்லது சேவையின் இணைப்பை உங்களது உள்ளடக்கத்தில் நீங்கள் சேர்ப்பதே துணை மார்க்கெட்டிங் எனப்படும். செயல்படும் விதம்: நீங்கள் பரிந்துரைத்துள்ள தயாரிப்பின் இணைப்பை உங்கள் தளத்திலிருந்து கிளிக் செய்து, அத்தளத்திற்குச் சென்று வாங்கும்பட்சத்தில், அந்த விற்பனையின் தொகையில் குறிப்பிட்ட கமிஷன் உங்களுக்கும் கிடைக்கும்.

தயாரிப்புப் பரிந்துரைகளில் ஆர்வம் காட்டும் நபர்களைத் தங்களது வழக்கமான பார்வையாளர்களாகக் கொண்ட வலைப்பதிவுகளுக்கு இது ஒரு சாத்தியமிக்க வருவாய் ஈட்டும் வழியாகும். பயனுள்ள தகவல், எப்படிச் செய்வது, லைஃப்ஸ்டைல் ஆகியவை தொடர்பான கட்டுரைகள் துணைத் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த நிறைய வாய்ப்புகளை வழங்குகின்றன.

சாகசப் பயண வலைப்பதிவின் உதாரணத்தை மீண்டும் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு காட்டிலுள்ள ஆற்றில் நீச்சலடித்துச் சென்ற பயணத்தைப் பற்றி ஓர் இடுகையிட்டீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அப்பயணத்தின்போது எடுத்துச்சென்ற பொருட்களான நீச்சல் உடை, துண்டு, கண் கண்ணாடி போன்றவற்றை அந்த இடுகையில் துணை மார்க்கெட்டிங்கில் பயன்படுத்தலாம். வலைப்பதிவின் வாசகர் நீங்கள் பரிந்துரைத்த நீச்சல் உடைக்கான இணைப்பைக் கிளிக் செய்து அதை வாங்கும்போது உங்கள் வலைப்பதிவின் மூலம் நீங்கள் வருமானம் ஈட்டுகிறீர்கள்.

பார்வையாளர்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள, துணை மார்க்கெட்டிங் நிறுவனத்துடனான உங்களது தொடர்பை வெளிப்படையாக வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் துணை மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனங்களுடனான உங்களது தொடர்பை அனைவரும் அறியும்படி வெளியிடுதல் என்பது பல்வேறு நாடுகளில் சட்டப்பூர்வமான தேவையாகும். எனவே துணை மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவதற்கு முன்பாக சட்ட ஆலோசகர்களுடன் விவாதித்து முடிவெடுங்கள்.   உங்கள் வலைப்பதிவின் நற்பெயர் நீங்கள் பரிந்துரைக்கும் தயாரிப்பு அல்லது சேவையுடனும் தொடர்புடையது என்பதால் உங்கள் துணை மார்க்கெட்டிங் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும்போது அவற்றின் தரத்தில் கவனமாக இருங்கள்.

பொருட்கள் அல்லது டிஜிட்டல் தயாரிப்புகளை விற்பது: உங்கள் வலைப்பதிவின் மூலம் பணம் சம்பாதிக்க பொருட்களை விற்பனை செய்யுங்கள்

ஆதாரம் உட்பொதிந்த படம்

தங்கள் வலைப்பதிவுகளின் மூலம் பணம் ஈட்டுவதற்கான ஒரு வழியாக, பல வலைப்பதிவர்கள் மின் வணிகங்களில் ஈடுபடுகின்றனர். அதாவது, ஆன்லைன் ஸ்டோரை உருவாக்கி, தயாரிப்புகளை விற்கத் தொடங்குகிறார்கள். உங்கள் தயாரிப்புகள் ஒரு பொருளாகவோ டிஜிட்டல் முறையிலோ இருக்கலாம். சாகசப் பயண வலைப்பதிவினைப் பொருத்திப் பார்க்கும்போது உங்கள் லோகோவைக் கொண்ட டி-ஷர்ட்களையோ நீங்கள் பயணம் செய்த சிறந்த இடங்களுக்கான டிஜிட்டல் வழிகாட்டிப் புத்தகங்களையோ விற்கலாம்.

உங்கள் தயாரிப்புகள் பொருளாக இருந்தாலும் விரச்சுவலாக இருந்தாலும் கட்டணங்களை ஏற்றுக்கொள்வதற்கான அமைப்பை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பொருட்களாக விற்பனை செய்யும்பட்சத்தில் அவற்றைப் போதுமான அளவு வைத்திருப்பது, அதற்கான இடம், வாங்குபவர்களுக்கு அனுப்பும் வழிமுறை, வரி செலுத்துதல் போன்றவற்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். டிஜிட்டல் பொருட்களை வாங்குபவர்களுக்கு மின்னணு முறையில் அனுப்பிவிடலாம் என்பதால் அது எளிதானது.

சந்தாக்கள்: வழக்கமான கட்டணத்தை விதிப்பதன் மூலம் புதிய வருவாய்க்கான வழியை ஏற்படுத்திக்கொள்ளலாம்

ஆதாரம் உட்பொதிந்த படம்

நீங்கள் இடுகையிடும் விஷயங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்கள் உங்கள் வலைப்பதிவில் இருக்கும்பட்சத்தில், கட்டண மெம்பர்ஷிப் அல்லது சந்தா முறையின் மூலம் உங்களது மதிப்புமிக்க உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி வருவாயை ஈட்டலாம். இதன் மூலம் நீண்ட காலத்திற்கு வருவாய் பெற இயலும்.

இந்த வணிக முறையில் வாசகர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பொதுவாக மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் தொடர்ந்து செலுத்துவார்கள். இந்த வழியில் வாசகர்களிடமிருந்து மெம்பர்ஷிப் அல்லது சந்தா கட்டணத்தைப் பெறுவதன் மூலம் நீங்கள் தொடர்ச்சியான வருமானத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். இந்த வழியிலான தொடர் பணப்புழக்கம் மிகவும் நிலையான, கணிக்கக்கூடிய, துல்லியமான வருவாய்க்கான சாத்தியத்தை அளிக்கிறது.

நீங்கள் வருவாய் பெற உதவும் சந்தாதாரர்கள் அல்லது உறுப்பினர்களுக்கு உயர்தர உள்ளடக்கம், ஒரு கலந்துரையாடல் சமூகம், கல்வி ஆவணங்கள், வீடியோக்கள் அல்லது கூடுதல் சேவைகள் மற்றும் கருவிகளை நீங்கள் வழங்கலாம். உங்கள் வலைப்பதிவுக்கு ஏற்றவாறு இந்த வசதிகளில் பலவற்றை ஒன்றிணைத்தும் நீங்கள் வழங்கலாம்.

பயிற்சி வழங்குதல்: உங்கள் வலைப்பதிவில் பயிற்சியளிப்பதன் மூலம் லாபம் பெறலாம்

ஆதாரம் உட்பொதிந்த படம்

உங்கள் வலைப்பதிவில் ஏதேனும் பயிற்சியை வழங்க வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் ஆன்லைன் படிப்புகளையோ பயிற்சித் தொகுப்புகளையோ தயார்செய்து கட்டணத்துடன் வழங்குவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

வீடியோக்கள் அல்லது பதிவிறக்கக் கூடிய மின்புத்தகங்களைப் போல தானே கற்றுக்கொள்ள உதவும் ஆவணங்களை உருவாக்கி வழங்கும்பட்சத்தில் உங்கள் பார்வையாளர்கள் அவர்களுக்கு ஏற்ற நேரத்தில் கற்றுக்கொள்ள நீங்கள் உதவுகிறீர்கள். உங்கள் பாடத்திட்டத்தைக் கொண்டு அவர்கள் கற்றுக்கொள்ளும்போது மற்ற தலைப்புகளைப் பற்றிய அவர்களின் ஆர்வத்தை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

ஆன்லைன் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்குக் குறிப்பிடத்தக்க நேரமும் ஆதாரங்களும் முன்னதாகவே உங்களுக்குத் தேவைப்படலாம், எனவே அதைச் சாத்தியமாக்கவும் பயன்படுத்தவும் ஈடுபாட்டுடன் கூடிய பார்வையாளர்கள் உங்களுக்குத் தேவை.

உங்கள் வருவாயை அதிகரிப்பதற்கான மற்றொரு வழி, பயிற்சியை நேரலை வீடியோவில் அளிப்பதாகும். இதில் நீங்கள் செலவழிக்கும் நேரத்திற்கான வருமானத்தைப் பெறலாம்.

உங்களது பயிற்சி ஆன்லைன் பாடத்திட்ட அடிப்படையில் இருந்தாலும் நேரடிப் பயிற்சியாக இருந்தாலும், மாணவர்கள் உங்களுடன் கலந்துரையாட மின்னஞ்சல் மூலமோ வலைப்பதிவின் மூலமோ வாய்ப்பளிக்கலாம்.

உங்கள் வலைப்பதிவைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பதற்குப் பல்வேறு வழிகள் உள்ளதென்பதை நினைவில் கொள்ளவும். அவற்றில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் நிபுணராகலாம் அல்லது உங்கள் வணிகத்திற்கு எது சிறந்தது என்பதைக் கண்டறிய பல வருவாய் வழிமுறைகளை இணைத்துப் பயன்படுத்தியும் பார்க்கலாம். ஆன்லைனில் லாபம்பெறுதல் பற்றி மேலும் அறிந்துகொள்ள எங்களது வலைப்பதிவைப் பார்க்கவும்.