ஆதாரம்
உங்கள் வலைதளங்களில் பயனர் ஈடுபாட்டை அதிகரிப்பது எப்படி?
நீங்கள் பிசினஸ் உரிமையாளராகவோ வலைப்பதிவராகவோ இருந்தால் பயனர்களுக்குச் சிறந்த உள்ளடக்கத்தையோ வேறெங்கும் கிடைக்காத தயாரிப்புகளையோ சேவைகளையோ வழங்குவதில்தான் உங்கள் இணையதளத்தின் வெற்றி அடங்கியுள்ளது என்பதை அறிந்திருப்பீர்கள்.
வெற்றிக்கான வேறொரு முக்கியக் காரணியும் உள்ளது. இந்தக் காரணிதான் பயனர்கள் வலைதளத்தைப் பார்ப்பதை ஊக்குவிக்கவும் முடிந்தவரை அவர்களை வலைதளத்தில் இருக்கச் செய்யவும் உதவுகிறது.
இது ‘பயனர் ஈடுபாடு’ என்று அழைக்கப்படுகிறது. டிராஃபிக் அளவின் அடிப்படையில் விளம்பரங்களை விற்கிறீர்கள் எனில் இது மிகவும் முக்கிய அளவீடாக இருக்கும். ஏனெனில் உங்கள் வலைதள உள்ளடக்கத்தை (உங்கள் விளம்பரங்கள் உட்பட) பயனர்கள் அதிக நேரம் பார்த்தால் நீங்கள் அதிக வருவாயைப் பெறலாம்.
உங்கள் இணையதளத்தின் பயனர் ஈடுபாட்டு நிலைகளை அளவிடும் முறைகள், அவற்றை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், அவற்றைச் செய்யும்போது என்னென்ன சிக்கல்கள் ஏற்படலாம் ஆகியவை குறித்து இந்தக் கட்டுரையில் விவரிப்போம்.
பயனர் ஈடுபாடு ஏன் முக்கியமானது? அதை எவ்வாறு அளவிட வேண்டும்?
அதிகம் விற்பனையாகாத உணவுகளை உணவகங்கள் தங்களின் மெனுவில் இருந்து அவ்வப்போது அகற்றி, நன்றாக விற்பனையாகும் உணவுகளை வைத்திருக்கும். இதேபோன்று நீங்களும் உங்கள் வலைதள உள்ளடக்கத்தில் எது பயனர்களை அதிகம் ஈடுபடச் செய்கிறது, எது கவனிக்கப்படாமல் போகிறது, எது பயனர்களை உங்கள் வலைதளத்தை விட்டு வெளியேறச் செய்கிறது என்பதை அறிந்துகொள்ள உள்ளடக்கத்தைக் கண்காணிக்க வேண்டும்.
இவற்றைப் பல வழிகளில் அளவிடலாம்:
- பவுன்ஸ் விகிதம்: உங்கள் வலைதளத்தில் எந்தவொரு செயலையும் செய்யாமல் வெளியேறும் பயனர்களின் சதவீதம். இணைப்பைக் கிளிக் செய்தல், எதையாவது வாங்குதல், படிவத்தை நிரப்புதல் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
- பயனர்கள் வலைதளத்தில் செலவிடும் நேரம்: இது உங்கள் இணையதளத்தில் ஒரு பயனர் செலவிடும் மொத்த நேரமாகும். ‘அமர்வின் கால அளவு’ என்றும் இது அழைக்கப்படுகிறது.
- பக்கப்பார்வைகள்: ஓர் உலாவியில் ஒரு பக்கம் எத்தனை முறை ஏற்றப்பட்டது அல்லது பார்க்கப்பட்டது என்பதை இந்த அளவீடு விளக்குகிறது.
- கருத்துகள் அல்லது பகிர்வுகள்: உங்கள் வலைதள உள்ளடக்கம் எந்த அளவிற்குப் பிரபலமாகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் உள்ளது என்பதை இதன் மூலம் தோராயமாக அறிந்துகொள்ளலாம்.
- மீண்டும் வரும் பயனர்களின் சதவீதம்: உங்கள் இணையதளத்திற்குக் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்கெனவே வந்து அதே சாதனத்தின் மூலம் மீண்டும் வரும் பயனர்களின் எண்ணிக்கையை இந்த அளவீடு குறிப்பிடுகிறது.
உங்கள் இணையதளத்திற்கான இந்தப் பயனர் ஈடுபாட்டு அளவீடுகளையும் பிறவற்றையும் அளவிட, உங்களுக்கு வலைதளப் பகுப்பாய்வு தேவை. இதைப் பெறுவதற்கான ஒரு வழி Google Analytics ஆகும். இதைச் சுலபமாக அமைக்க முடியும். மேலும் இது Google AdSenseஸுடன் தடையின்றி இயங்கும்.
அடுத்ததாக, பயனர் ஈடுபாட்டை மேம்படுத்துவது எப்படி?
பயனர்களின் எந்தெந்தச் செயல்பாடுகளை அளவிட வேண்டும், அவற்றை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை இப்போது அறிந்துகொண்டீர்கள். அடுத்ததாக, பயனர் ஈடுபாட்டு நிலைகளை மேம்படுத்துவதற்கு நீங்கள் செய்யக்கூடிய சில படிகள் குறித்துப் பார்ப்போம்.
- ஒரு கருதுகோளைப் பரிசோதித்துப் பாருங்கள்: உதாரணத்திற்கு, பக்கப்பார்வைகளை அதிகரிக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் கட்டுரைகளின் இறுதியில் சேர்க்கும் இணைப்புகளில் (பயனர்கள் விரும்பக்கூடிய உள்ளடக்கத்திற்கு அழைத்துச் செல்லும் இணைப்புகள்) ஒரு பரிசோதனையை இயக்கலாம். அதன் பிறகு Google Optimize போன்ற கருவியைப் பயன்படுத்தி A/B பரிசோதனைகளை விரைவாக அமைக்கலாம். இதன் மூலம் எந்த உள்ளடக்கம், மெசேஜ்கள் மற்றும் பிற அனுபவங்கள் உங்கள் வாடிக்கையாளர்களை ஈடுபாட்டுடனும் மகிழ்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்.
- பவுன்ஸ் விகிதங்களைக் கண்காணியுங்கள்: உங்கள் வலைதளப் பக்கங்களில் ஒன்றுக்கு டிராஃபிக் அதிகம் இருந்தும் அதன் பவுன்ஸ் விகிதத்தின் மதிப்பு அதிகமாக உள்ளதாகப் பகுப்பாய்வு காட்டினால் கூடுதல் ஆய்வு தேவைப்படலாம். உதாரணத்திற்கு, வலைதளப் பக்கம் ஏற்றப்படும் நேரத்தைக் குறைக்க வேண்டியிருக்கலாம் அல்லது அதற்கான வழிசெலுத்தலை எளிதாக்க வேண்டியிருக்கலாம். உங்கள் வலைப்பதிவைப் பயனர்கள் வாசிக்கும்போது இடையூறு செய்யும் பாப்-அப்கள் ஏதேனும் உள்ளனவா? உங்கள் வலைதளத்தின் முகப்புப் பக்கத்திற்குப் பயனர்கள் வரும்போது ஒலிக்கும்படி தானியங்கு ஒலி இயக்கப்பட்டுள்ளதா? மொபைல் சாதனங்களில் உங்கள் வலைதள உள்ளடக்கத்தை வாசிப்பது எந்த அளவிற்கு எளிதாக உள்ளது? இதுபோன்ற சிக்கல்கள் அனைத்தும் பவுன்ஸ் விகிதத்தைப் பாதிக்கலாம். இதனால் நீங்கள் ஏதேனும் மாற்றங்களைச் செய்யும்போது அவை ஒவ்வொன்றையும் சரிபார்ப்பதையும் அவ்வப்போது பரிசோதிப்பதையும் அவற்றின் தாக்கத்தை அளவிடுவதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.
- நீங்கள் செய்தி வெளியீட்டாளரா? ஆம் எனில், பயனர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் அவர்களைப் பற்றிய தரவைத் துல்லியமாகவும் சிறப்பாகவும் சேகரிக்கவும் News Consumer Insights கருவியைப் பயன்படுத்திப் பாருங்கள்.
கவனத்தில்கொள்ள வேண்டியவை
முதலில், உங்கள் வலைதள அளவீடுகளைத் தொழில்துறைத் தரநிலைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்
உங்கள் வலைதளத்தின் பயனர் ஈடுபாட்டு நிலைகளை அளவிடுவதற்கு முன்பு, உங்கள் வலைதளம் தொடர்பான தொழில்துறைத் தரநிலைகளைச் சரிபாருங்கள். இது உங்கள் வலைதளத்தின் செயல்திறனைத் தொழில்துறைத் தரநிலைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க உதவும். மேலும் வலைதளத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் சரிசெய்ய வேண்டிய சிக்கல் ஏதேனும் இருந்தால் அதைக் கொடியிடவும் இது உதவும். இதைத் தொடங்குவதற்கான சரியான இடம் Google Analytics ஆகும். உங்கள் வலைதளத்தின் பவுன்ஸ் விகிதத்தையும் பிற செயல்திறன் தரவையும் 1,600க்கும் அதிகமான வெவ்வேறு தொழில்துறை நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க இது உதவும்.
பவுன்ஸ் விகிதங்களைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்
பவுன்ஸ் விகிதங்கள் பயனுள்ள அளவீடுதான் என்றாலும் அந்த அளவீட்டைப் பயன்படுத்துவதற்கான சூழலைப் புரிந்துகொள்வது முக்கியமானது. உதாரணத்திற்கு, ஒரு பயனர் உங்கள் இணையதளத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு வெளியேறியதால் உள்ளடக்கம் கவரக்கூடியதாக இல்லை என நீங்கள் கருதுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பயனர் பார்த்த பக்கத்தில் உள்ளடக்கம் மிகவும் நீளமாக இருந்து அவர் அந்தப் பக்கத்தில் அதிக நேரம் செலவிட்டிருந்தால், இந்த அளவீட்டை நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில், ஸ்க்ரோல் நீளம் என்ற அளவீட்டைப் பயன்படுத்துவதன் மூலம் பயனுள்ள மற்றும் அதிகப் புள்ளிவிவரங்களைக் கொண்ட தரவை நீங்கள் பெறலாம்.
பக்க அளவீட்டிற்கான நேரத்தைக் கவனமாக மதிப்பிடுங்கள்
பவுன்ஸ் விகிதங்களைப் போன்றே, உங்கள் வலைதளப் பக்கத்தில் பயனர்கள் செலவிடும் நேரமும் தவறாகக் கணக்கிடப்படலாம்.
இந்தச் சூழலைக் கற்பனை செய்து பாருங்கள். பயனர் உங்கள் முகப்புப்பக்கத்திற்கு வந்த நேரம் காலை 11:05 மணி எனப் பகுப்பாய்வுக் கருவி குறித்துக்கொள்கிறது என வைத்துக்கொள்வோம். அதே பயனர் அந்தப் பக்கத்தில் ஒரு நிமிடம் இருந்துவிட்டு உங்கள் வலைதளத்தில் உள்ள வேறு பக்கத்தைக் கிளிக் செய்கிறார். அப்போது, பகுப்பாய்வுக் கருவி நேரத்தைக் காலை 11:06 எனக் குறித்துக்கொள்ளும். பயனர் அந்தப் பக்கத்தில் ஐந்து நிமிடங்கள் இருந்துவிட்டு வெளியேறுகிறார் எனில், வலைதளத்தில் அவர் மொத்தம் ஆறு நிமிடங்கள் செலவிட்டிருப்பார்.
ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால், எல்லாப் பகுப்பாய்வுக் கருவிகளுமே வலைதளத்தில் பயனர்கள் செலவிடும் மொத்த நேரத்தை ஒரு நிமிடம் எனத் தவறாகப் பதிவு செய்கின்றன. ஏன் இவ்வாறு நிகழ்கிறது? உங்கள் சொந்த வலைதளப் பக்கங்களில் பயனர் செலவிடும் நேரத்தை மட்டுமே கணக்கிடும்படி இந்தக் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மற்ற வலைதளப் பக்கங்களில் பயனர்கள் செலவிடும் நேரத்தை இவை கணக்கிடுவதில்லை. எனவே பயனர் வேறொரு வலைதளத்திற்குச் செல்லும்போது, அந்தப் புதிய வலைதளமானது உங்கள் வலைதளத்தின் கடைசிப் பக்கத்தில் பயனர் செலவழித்த நேரத்தைக் கணக்கிடத் தேவையான நேரமுத்திரையை அனுப்பாது. இதன் காரணமாக, பயனர் உங்கள் முகப்புப்பக்கத்தில் ஒரு நிமிடம் இருந்துவிட்டு அதன் பிறகு வெளியேறிவிட்டதாகவே பகுப்பாய்வுக் கருவி கணக்கிடும்.
ஒரே நேரத்தில் பல அளவீடுகளைப் பயன்படுத்த வேண்டாம்
பயனர் ஈடுபாட்டு நிலைகளை மேம்படுத்துவது நிச்சயம் ஒரு நல்ல செயல்பாடுதான் என்றாலும் பல அளவீடுகளை ஒரே நேரத்தில் கணக்கிடாமல் இருப்பதும் முக்கியம். உங்கள் வருவாயை அதிகரிக்கக்கூடிய ஒற்றை அளவீட்டை (வலைதளத்தில் பயனர்கள் செலவிடும் நேரம், பகிர்வுகள் போன்றவை) கண்டறிவது நல்லது. அதன் பிறகு வலைதளத்திற்கான தரநிலைகளை வரையறுப்பதிலும் நீங்கள் விரும்பும் முடிவுகளைப் பெறுவதற்கான பரிசோதனைகளை உருவாக்குவதிலும் நீங்கள் கவனம் செலுத்தலாம்.
உங்கள் வலைதளத்திற்கான பயனர் அனுபவத்தையும் செயல்திறனையும் வருமானம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகளையும் மேம்படுத்துவதற்கான கூடுதல் தகவல்களுக்கு, எங்களின் தகவல்கள் பிரிவிற்குச் செல்லுங்கள்.